ullal

Wednesday, July 16, 2008

பாட்டி வடை சுட்ட கதையின் நுண்ணரசியல் (2)

இந்த கதையை மேலோட்டமாக படிக்காமல் உற்று கவனித்தால் இதில் ஒளிந்திருக்கும் நுண்ணரசியல் புலப்படும். இந்த கதையில் வரும் காக்கா தலையை பக்கவாட்டில் ஆட்டி வடையை சாப்பிடுவது இது ஒரு சைவ காக்கா என்று புரிகிறது. தலையை மேலும் கீழும் ஆட்டிய நரி வைணவ சமயத்தை சேர்ந்தது. அப்பாவி சைவ காக்கையை தந்திர வைணவ நரி ஏமாற்றியது சைவர்களை அப்பாவிகளாக சித்தரிக்க உதவுகிறது. இதன் மூலம் கதை ஆசிரியர் வைணவத்துக்கு எதிராக சைவத்தை தூக்கி பிடிக்கிறார் என்று தெரிகிறது. புரிகிறதா தோழ்ர்களே ?


மேலும் இந்த கதையில் கதை முழுவதும் மைய பாத்திரமாக வடை வருகிறது. முன்பெல்லாம் கதைகளில் வைணவம் அதிகமாக வரும். இந்த கதையில் வரும் வடை சைவ வடை. குறைந்தபட்சம் இடைவேளைக்கு பின் வடையை வைணவ போண்டா வாக மாற்றி இருந்தால் கொஞ்சம் நடுநிலை இருந்திருக்கும். மணிரத்னம் கதைகளில் வடை , போண்டா இரண்டுமே சமமாக வரும்.


அத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மிடையே ஊறிப்போன நிலபிரபுத்துவ கூறுகளை உள்ளடக்கிய பொதுபுத்தி சிந்தனையின் குறியீடு இந்த வடை. வடை என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பொருளும் இல்லை. மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே வடை சாப்பிட சாத்தியப்படும். கதை ஆசிரியர் தன் வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இங்கு வடையை உயர்த்தி பிடிக்கிறார். இது புரியாமல் இந்த கதையை எல்லா வர்க்கத்தினரும் முட்டாள்தனமாக தங்கள் பேரன் பேத்திக்கு சொல்லி வருகிறார்கள். இந்த கதையில் பாட்டி என கஞ்சி காய்ச்சி இருக்கக்கூடாது? கஞ்சி குடித்தால் நரியின் மூக்கு வெந்து விடுமா? இந்த வடை அரசியல் பற்றி 1852 இலேயே எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார். புரட்சி வெடித்து தொழிலாள வர்க்கம் ஆட்சியை கைப்பற்றும்போது கஞ்சி வடையாக மாறும். வடை கஞ்சியாக மாறும். சோவியத் ரஷ்யாவில் வடை தடை செய்யப்பட்டதை இங்கு நினைவு கூறுங்கள்.

2 Comments:

At 6:10 AM, Blogger Mathuvathanan Mounasamy / cowboymathu said...

என்ன நடக்குதென்றே புரியவில்லை. இது கமலின் பார்ப்பானிய முகம் பதிவுக்கு எதிர்வினையா?

என்னவோ போங்க, வாசிக்க சுவாரசியமா இருக்குது.

மதுவதனன் மௌ.

 
At 7:21 AM, Anonymous Anonymous said...

கலக்கல் காமெடி கலாட்டா !!!

 

Post a Comment

<< Home