ullal

Friday, December 01, 2006

நான் திருத்திய இந்தி பரீட்சை பேப்பர்

இங்கு இந்தி பரீட்சை பற்றிய பதிவு பார்த்த போது நான்திருத்திய மத்திய அரசாங்க இந்தி பரீட்சை பேப்பர் நினைவுக்கு வருகிறது.
மத்திய அரசாங்க அலுவலர்களின் இந்தி பரீட்சை பேப்பரை திருத்தியபோது நான் நாலாவது வகுப்பு மாணவி. இன்று வரை இந்தி தெரியாது ஆனால் இந்தி எழுத்துக்கள்மட்டும் தெரியும். அப்புறம் எப்படி பேப்பர் திருத்திஇருக்க முடியும் என்று கேட்டால் மேலே படிக்கவும்.

என் அப்பாவின் நண்பர் ஒரு இந்தி பண்டிட். இன்று போய்நாளை வா இந்தி பண்டிட் போல இருப்பார்.இவர்தான் மத்திய அரசாங்க அலுவலர்களுக்கு இந்தி வாத்தியார்.அப்பொழுது மத்திய அரசாங்கத்தில் அனைவரும் கட்டாயம் இந்திபடிக்க வேண்டுமென்று ஒரு விதி இருந்தது. (இப்பவும் இருக்கா?)நடுத்தர வயது மாமாக்களையெல்லாம் திடீரென்று இப்படிபடிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள்?

விடைத்தாள்கள் புத்தகம் போல நிறைய பக்கம் இருக்கும்.முதல் பக்கத்தில் பிள்ளையார் சுழி. ஒவ்வொரு பக்கத்திலும் மேலே கண்டிப்பாக பக்க எண்,அதை சுத்தி இரண்டு ப்ராக்கெட். அப்புறம் வினாவின் எண்ணை போட்டு மேலும் ஒரு ப்ராக்கெட்.அதற்கு பக்கத்தில் வினாத்தாளை பார்த்து கேள்வியை மட்டும் அழகாக எழுதி இருப்பார்கள். விடை இருக்க வேண்டிய இடத்தில் கால் ஏக்கர் காலி இடம். மீண்டும் அடுத்த பக்கம், பக்க எண் ப்ராக்கெட், காலி இடம். இவ்வளவுதான்.

எல்லா பேப்பருக்கும் மேலே ஒரு கோழி முட்டை போடுவதற்கு இந்தி பண்டிட் ஒரு பேனா பரிசளித்தார் என்று நினைக்கிறேன்.

இது போல +1 படிக்கும்போது ஒரு கல்லூரி வாத்தியாருக்கு Bsc தமிழ் பேப்பர் திருத்தியிருக்கிறேன்.சென்னை பல்கலைகழகத்தில் எப்படி பரீட்சை பேப்பர் திருத்துகிறார்கள் என்று இப்போது தெரிந்திருக்குமே!